அரசின் உத்தரவை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு உத்தரவு உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:முதல்வர் பினராய் விஜயன் எச்சரிக்கை>
அரசின் உத்தரவை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு உத்தரவு உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:முதல்வர் பினராய் விஜயன் எச்சரிக்கை

 

 

கோவிட் 19 நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு கூறும் அறிவுரைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு உத்தரவு உள்பட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வரும். அரசின் அறிவுரைகளை வழிபாட்டுத்தலங்கள் பின்பற்றாவிட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். இது நமது சமூகம் முழுவதையும் பாதுகாக்கும் நடவடிக்கை என்பதால் அரசு எதையும் விட்டுக் கொடுக்காது. அரசு அறிவித்த அறிவுரைகளை பெரும்பான்மையான வழிபாட்டுத்தலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனாலும் சில இடங்களில் ஆட்கள் கூடுவதாக அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. இதை தவிர்க்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். காசர்கோட்டில் சிலர் பொறுப்புணர்வு இல்லாமல் செயல்பட்டதால் தான் அந்த மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காசர்கோடு மாவட்ட நிர்வாகம் அந்த நோயாளியுடன் பயணம் செய்தவர்களிருந்தும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியில் இருந்தும் சேகரித்த விவரங்களை வைத்து அந்த நோயாளி எங்கெல்லாம் சென்றார் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அது முழுமையானதல்ல. அந்த நோயாளிக்கு டாக்டர்கள் கவுன்சிலிங் நடத்தி விவரங்களை சேகரிக்க முயற்சித்தனர். ஆனால் அவர் சில விவரங்களை மூடி மறைக்கிறார். இதில் ஏதாவது மர்மங்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இப்படி பொறுப்பில்லாமல் செயல்பட்ட அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் ஒன்றாக ஓரணியில் திரண்டு போராடி வரும் பொழுதும் சிலருக்கு இன்னும் பொழுது விடியவில்லை என்றே தோன்றுகிறது. அவர்களுக்கும் சேர்த்து தான் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பது இன்னும் அவர்களுக்கு ஏனோ புரியவில்லை. அரசின் உத்தரவுகளையும் அறிவுரைகளையும் பின்பற்றாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்படிப்பட்டவர்கள் மீது  சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அனைத்து மாவட்ட எஸ்பி களுக்கும் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு எஸ்பி கள் தவிர வேறு பொறுப்பில் உள்ளவர்களும் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அதிக உறுப்பினர்கள் உள்ள வீடுகளில் கண்காணிப்பில் உள்ளவர்கள் அரசு ஒதுக்கும்  மையங்களுக்கு செல்வது நல்லது. இதயநோய், புற்றுநோய் மற்றும் எளிதில் நோய் வர வாய்ப்புள்ளவர்கள் அரசின் மையத்தில் சேர்வது நல்லது. வீட்டில் உதவிக்கு வேறு யாரும் இல்லாதவர்களும் அரசின் இந்த தனி மையத்தில் சேர்ந்து கொள்ளலாம். பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை உறுதி செய்ய தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை போக்குவரத்து துறை செயலாளர், அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மற்றும் போக்குவரத்து ஆணையாளர் ஆகியோர்  அடங்கிய ஒரு குழு கண்காணிக்கும். தமிழகத்திலிருந்து சரக்குப்  போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இருக்காது என்று தமிழக அரசு கேரள அரசுக்கு உறுதியளித்துள்ளது. பேருந்துகளில் நீண்ட தூர பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். விமானங்களில் வருபவர்கள் விமான நிலையங்களில் எழுதிக் கொடுக்கும் உறுதிமொழியை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று யாரும் வதந்தி பரப்ப கூடாது. பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொருள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது. எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கையை உறுதி செய்தே இந்த நடைமுறைகள் அனைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் உள்ள வியாபாரிகளுடன் திங்கட்கிழமை ஆலோசனை நடத்த உள்ளோம். வியாபாரிகள் வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை சப்ளை செய்யும் முறையை கொண்டுவர வேண்டும்.

கோலாலம்பூரில் சிக்கியுள்ள 250 மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வங்கிகளில் 4 சதவீத வட்டி உள்ள நகைக்கடனை திரும்ப அடைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை  நீட்டிக்க வேண்டும் என்று மாநில வங்கிகள் துணைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய விவசாயத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்களின் நெரிசலை குறைக்கும் வகையில் நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று வங்கிகள் சம்மேளனத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் மருத்துவ பரிசோதனை நடத்துவதற்காக 3 மருத்துவ கல்லூரிகளிலுள்ள பரிசோதனை கூடங்களில் ஷிப்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். விரைந்து நோயைக் கண்டுபிடிக்கும் ரேப்பிங் டெஸ்டுக்கு ஐ. சி.எம்.ஆரின் அனுமதி கோரப்படும். இவ்வாறு முதல்வர் பினராய் விஜயன் கூறினார். பேட்டியின்போது அமைச்சர்கள் சந்திரசேகரன்,  சைலஜா மற்றும் தலைமைச் செயலாளர் டோம் ஜோஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.